Published : 29 Sep 2023 06:15 AM
Last Updated : 29 Sep 2023 06:15 AM

மாயாஜால் நிறுவனத்துக்கு பட்டா வழங்கியதற்கு எதிரான நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மாயாஜால் திரையரங்க வளாகம்

சென்னை: சென்னை ஈசிஆரில் 2 ஏக்கர் நிலத்துக்கு மாயாஜால் நிறுவனத்தின் பெயரில் ரயத்துவாரி பட்டா வழங்கியதை எதிர்த்து நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தாமாக முன்வந்து பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை ஈசிஆரில் கானத்தூர் அருகே ரெட்டிக்குப்பத்தில் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் உள்ளது. இதன் வசம் உள்ள 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் கடந்த 2018-ம் ஆண்டு தாமாக முன்வந்து நோட்டீஸ் பிறப்பித்தார்.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி மாயாஜால் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குவிசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜியும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.அருணும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமி்ழ்நாடு எஸ்டேட் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாற்றல் சட்டத்தின் கீழ் அனாதீனம் என வகைப்படுத்தப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை, 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு தரும்படி மாயாஜால் நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டுவருவாய்த் துறையிடம் விண்ணப்பித்துள்ளது.

அதன்படி ரூ.22.76 லட்சம் ஆண்டு வாடகை அடிப்படையில் அந்த 2 ஏக்கர்நிலத்தை மாயாஜால் நிறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடவட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு கடந்த 2009-ம் ஆண்டு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் திடீரென அந்தநிலத்தை கடந்த 1999-ம் ஆண்டே அதன்முன்னாள் உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கிவிட்டதாகவும், எனவே அந்த நிலத்துக்கு பட்டா வழங்கவேண்டுமெனவும் மாயாஜால் கடந்த 2011-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளது.

இந்த கோரிக்கையை உதவி தீர்வை அதிகாரி நிராகரித்துள்ளார். ஆனால், தங்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்காமல் விண்ணப்பத்தை உதவிதீர்வை அதிகாரி நிராகரித்து விட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தி்ல் மாயாஜால் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் கடந்த2011-ம் ஆண்டு ரயத்துவாரி பட்டா வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் மாயாஜால் நிறுவனத்துக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தாமாக முன்வந்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இதில் எந்த தவறும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. அதில் தலையிடவும் முடியாது.

ஏனெனில் கடந்த 2003-ம் ஆண்டு குத்தகைக்கு தரும்படி விண்ணப்பித்த இந்த நிறுவனம் திடீரென அதற்கு முன்பாக 1999-ம் ஆண்டே விலைக்கு வாங்கி விட்டோம் எனக் கூறுவதை ஏற்க முடியவில்லை. அப்படியே விலைக்குவாங்கியிருந்தாலும் முதலில் பட்டா கோரிதான் விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

எனவே மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டு இருப்பதால், தாமாக முன்வந்து பிறப்பித்த நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் முன்பாக உச்ச நீதிமன்றத்திடமும் தமிழக அரசு தகுந்தஒப்புதல் பெறவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x