

சென்னை: தமிழகத்தில் சமீபகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, புறநோயாளிகளின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினசரி அனுமதிக்கப்படும் 70 குழந்தைகளில் 20-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பும் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, ஒரு வாரத்தில் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 4,454 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் அக்.1-ம் தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.