Published : 29 Sep 2023 06:00 AM
Last Updated : 29 Sep 2023 06:00 AM
சென்னை: தமிழகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும், வனப்பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
கானா நாட்டின் தலைநகர் அக்ரோவில், அக்.3 முதல் 5-ம்தேதி வரை 66-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில், தமிழக கிளையின் பிரதிநிதியாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்திய வட்டார பிரதிநிதிகள் செயலாளராக தமிழக சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனும் பங்கேற்கிறார்.
கானா செல்லும்முன் எகிப்து,தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வுப்பயணத்தை பேரவைத்தலைவர் மேற்கொள்கிறார். இதற்காக கடந்த செப்.26-ம் தேதி பேரவைத்தலைவர், பேரவை செயலர், பேரவைத் தலைவரின் செயலர் ஆகியோர், எகிப்தின் தலைநகர் கெய்ரோ சென்றனர்.
கெய்ரோவில், அந்நாட்டின் செனட் துணை சபாநாயகர் பாஹா எல்டின் ஸுக்கா தலைமையில் நடைபெற்ற செனட் சபையின் கலந்துரையாடல் கூட்டத்தில் அப்பாவு பங்கேற்றார். இதில், அந்நாட்டின் செனட் செகரட்டரி ஜெனரல் முகம்மது இஸ்மாயில் இட்மேன், இந்திய தூதர் அஜித்குப்தா, அசாம் சட்டப் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கூட்டத்தில், அப்பாவு பேசியது: எகிப்தில் முதன்முதலில் தோன்றிய நைல் நதி நாகரீகம் போன்று, இந்தியாவின் வடக்கில் சிந்துச்சமவெளி நாகரீகமும், தெற்கில் தாமிரபரணி நாகரீகமும் மிகவும் தொன்மையானவை. அதேபோல், தொன்மையான 3 மொழிகளில் தமிழ்மொழி பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பழமையான மொழி இன்றும் இளமையுடன் உள்ளது. நாளையும் இது தொடரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதேபோல், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும், வனப்பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுத்து, நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT