Published : 11 Dec 2017 10:47 AM
Last Updated : 11 Dec 2017 10:47 AM

ஏகாம்பரநாதர் கோயில் சிலை விவகாரம்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருவாச்சி காணாமல் போய்விட்டதாகவும், புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையில் குறிப்பிட்டபடி 5.75 கிலோ தங்கம் பயன்படுத்தவில்லை என்றும் இரு வழக்குகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு செய்யப் பட்டவை.

இந்நிலையில் இந்த வழக்குகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஏற்கெனவே சிவகாஞ்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாகச் சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்காக 5.75 கிலோ தங்கம் தேவை என்று நன்கொடை மூலம் தங்கம் பெறுவதற்காக விளம்பரம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த அளவுக்குத் தங்கம் புதிதாக செய்யப்பட்ட சிலையில் சேர்க்கப்படவில்லை என்ற புகாரில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதேபோல் கோயில் திருவாச்சி காணாமல் போனதாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்குகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திலும், காவல் அதிகாரிகளிடமும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் முருகேசன் கூறும்போது, “புதிதாகச் செய்யப்பட்ட சிலைக்கு 163 கிராமம் தங்கம் மட்டுமே நன்கொடையாக வந்தது. அதனை உபயதாரரே சிலை தயாரிக்கும் இடத்தில் நேரடியாக வழங்கியுள்ளார். இந்தச் சிலை செய்வதற்காகத் தங்கம் எதுவும் நன்கொடையாகப் பெறவில்லை. தங்கம் 5.75 கிலோ நன்கொடையாகப் பெற்றதாக கூறுவது முற்றிலும் தவறானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x