

திருவாரூர்: சாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதிச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சீமான், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பது அவசியமான ஒன்று. முதலில்காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவிலும், திமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் நடத்தராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் முன்வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
30 கோடி மக்கள் தொகை இருக்கும்போது 534 எம்.பி தொகுதிகள் உருவாக்கப்பட்டன. மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்த நிலையிலும் 534 தொகுதிகள் என்பதை எப்படி ஏற்க முடியும். எனவே, 6 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கு ஒரு எம்.பி என்பதை 3 தொகுதிகளுக்கு ஒரு எம்.பி என மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.
இதன் மூலம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸும், பாஜகவும் தான் முதல் எதிரி. திமுகவும், அதிமுகவும் உள்ளூர் எதிரி. இவர்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.