

கள்ளக்குறிச்சி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஆண் பணியாளர்களை தவிர்க்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீரசோழபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித் தள பொறுப்பாளராக வசந்தகுமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். பணிக்கு வரும் பயனாளிகளின் வருகை பதிவு செய்வதற்காக புகைப்படம் எடுத்து அனுப்புவது இவரது வழக்கமான பணி.
அந்த வகையில் பணிக்கு வரும் பெண்களை தனது செல்போனில் படம் எடுத்தவர், அதில் சில பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்துள்ளார். இதனிடையே பண நெருக்கடி ஏற்பட்டதால், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடம் தனது செல்போனை வசந்தகுமார் அடமானம் வைத்துள்ளார்.
அடமானம் பெற்ற தினேஷ்குமார், வசந்த குமாரின் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது, அதில் வீரசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சில பெண்களின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்தப் படத்தை, வீரசோழபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவருக்கு பகிர்ந்துள்ளார். வார்டு உறுப்பினர் அந்தப் படத்தை ஊராட்சித் தலைவருக்கும், ஊராட்சி செயலருக்கும் பகிர்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இவ்வாறு ஆபாச படங்கள் பகிரப்பட்ட நிலையில், சம்பந்த்தப்பட்ட பெண் பயனாளிகளுக்கு இச்சம்பவம் தெரிய வர, அவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து போலீஸார் முதற்கட்டமாக 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஊராட்சி செயலரும் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில், ஆபாசப் படங்கள் யாருக்கு பகிரப்பட்டது என ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், ஆய்வு செய்து, இப்படங்கள் 7 பேருக்கு பகிர்ந்திருப்பதை கண்டுபிடித்து, அதன் விவரத்தை தியாகதுருகம் போலீஸாருக்கு அளித்துள்ளனர்.
இதைவைத்து தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாநில அளவில் பேசு பொருளானதால், இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்டத் திட்ட அலுவலர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில் மக்கள் நலப் பணியாளர்கள் இத்திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், பணித் தள பொறுப்பாளர் பணியிடத்துக்கு ஆண்களை நியமிக்க வேண்டுமா என ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பணித் தள பொறுப்பாளர் நியமனம் என்பது ஊராட்சி மன்றத் தலைவரின் பரிந்துரைப்படியே நடைபெறுவதால், பணித் தள பொறுப்பாளர் ஊராட்சி மன்றத் தலைவரின் அனைத்து செயல்களுக்கும் உடந்தையாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் என்பதால், பணித் தள பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.