Published : 28 Sep 2023 07:26 AM
Last Updated : 28 Sep 2023 07:26 AM
சென்னை: அதிமுக கட்சி ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தியும், 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கியும் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி இருப்பது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்: இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்து, முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளை பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, கட்சி ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 84 ஆக உயர்த்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த 6 மாவட்டச் செயலாளர்கள் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அவற்றோடு மேலும் மாவட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள் ளன.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கலசப்பாக்கம், செங்கம் அடங்கிய திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய தொகுதிகள் அடங்கிய தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி ஜக்கையன், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகள் அடங்கிய திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக இசக்கிசுப்பையா ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர்.
அன்வர் ராஜா, ஜி.பாஸ்கரன்: ஆவின் முன்னாள் தலைவர் சி.கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் (சிவகங்கை), முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகர் (திருச்சி),வேலூர் புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் வி.ராமு, ராயபுரம் மனோ, துரை.செந்தில் (தஞ்சாவூர்), ஆர்.காந்தி (தஞ்சாவூர்) ஆகியோரும் அமைப்புச்செயலாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளராக இருந்த இன்பதுரை, கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த நடிகை விந்தியா, இணைச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவுதலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யன், பொருளாளராக எஸ்.டி.தர்மேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம்: கட்சி ரீதியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் புதுச்சேரி மாநிலம் என ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் அவைத் தலைவராக ஜி.அன்பானந்தம், பொருளாளராக பி.ரவி பாண்டுரங்கன், மாநிலச் செயலாளராக ஏ.அன்பழகன், இணைச் செயலாளர்களாக முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், எஸ்.வீரம்மாள், எம்.மகாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்மன் கோயிலில் தரிசனம்: இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் பழனிசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT