தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்

தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்
Updated on
1 min read

மயிலாடுதுறை: கோயில்களில் ஓதுவார் பணிக்கு முறையான தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஓதுவார்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் முழுநேரமாக முறையாக கற்றுத் தேர்ந்தவர்கள் இல்லை என்பது ஊடகச் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. முறையாக 5 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும்படி செய்யப்பட்ட தவறான நியமனமாக இதைக் கருதுகிறோம். இது தவறான முன்னுதாரணமாகவும் அமையும்.

80 ஆண்டு காலமாக தேவார பாடசாலை நடத்தி வருகிறோம். பெரும்பான்மையான ஓதுவார்கள் இங்கு பயின்றவர்களே என்ற தார்மீக அடிப்படையில், அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு வருகிறோம்.

5 ஆண்டுகள் தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே ஓதுவார்களாக முன்னர் பணி நியமனம் செய்துவந்தனர். அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அதைத் தளர்த்தி 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்திலும், 3 ஆண்டுகள் இசைப் பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது மாதம் ஒரு வகுப்பு என்ற வகையில் 2 ஆண்டுகள் 24 வகுப்புகளில் மட்டும் கலந்துகொண்டு பெற்ற சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட முறையான தேர்ந்த நியமனமாக இருக்காது. அது ஓதுவார் பணிக்கான பாடத்திட்டமும் கிடையாது.

தற்போது, தேவார பாடசாலைகள், பல்கலைக்கழகம், இசைப் பள்ளி ஆகியவற்றில் முழு நேரமாக அர்ப்பணிப்புடன் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கும். இத்துறையில் மாணவர்களின் சேர்க்கையும் குறையும். எனவே, கோயில்களில் ஓதுவார் பணிக்குரிய தரமான, தகுதியான நியமனங்களையே செய்ய வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கோயில்களில் ஓதுவா மூர்த்தியாக பணி செய்வோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். ஓதுவார் பணியைத் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தி, புனிதமான திருமுறைகளை ஓதும் நன் நெறியுடையவர்களை தரம் தாழ்த்துவதும் மாற்றப்பட வேண்டிய நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in