Published : 28 Sep 2023 04:02 AM
Last Updated : 28 Sep 2023 04:02 AM

மாடுகள் உயிரிழப்பு: வங்கி கடனை செலுத்த முடியாமல் கோடந்தூர் மலைவாழ் பெண்கள் தவிப்பு

உடுமலை: உடுமலை அடுத்துள்ள கோடந்தூர் மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5 பெண்கள், வங்கிக் கடனுதவி மூலம் தலா 2 மாடுகள் வீதம் 10 கறவை மாடுகள் வாங்கினர்.

ஒரு மாத இடைவெளியில் 4 பேர் வாங்கிய 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருவதாக மலைவாழ் பெண்கள் கவலை தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: நபர் ஒருவருக்கு 2 கலப்பின மாடுகள் என்ற அடிப்படையில் ரூ.1.20 லட்சம் மதிப்பில் மாடுகள் வழங்கப்பட்டன.

இதில், தாட்கோ மானியமாக ரூ.40,000 போக ரூ.80,000 கடனை 2 ஆண்டுகால தவணையாக திருப்பிச் செலுத்த வேண்டும். 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மாதத் தவணையாக ரூ.2500-ஐ முறையாக செலுத்தியுள்ளோம். இந்நிலையில், மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், இழப்பீட்டு தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இந்நிலையில் அரசு மானியமாக வழங்கிய தொகையை பயனாளிகளுக்கு வழங்காமல், வங்கி நிர்வாகம் அதனை எங்களது கடன் தொகையில் வரவு வைத்து விட்டது. முறைப்படி மானியத் தொகை எங்களுக்குத்தான் சேரவேண்டும். எங்கள் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலைக்கு நாட்டு மாடுகள்தான் தாக்குப் பிடிக்க முடியும். கலப்பின மாடுகளால் வாழ முடியாது.

வங்கியின் நிர்பந்தம் காரணமாகவே எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கலப்பின ஜெர்சி மாடுகள் வழங்கப்பட்டன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இது குறித்து வங்கி அலுவலர்கள் கூறும்போது, ‘‘மலைவாழ் பெண்கள் 5 பேருக்கு கறவை மாடுகளுக்கான கடன் வழங்கப்பட்டது. மாடுகளை வங்கி அலுவலர்கள் ஆய்வு செய்யும் முன்பே, மாடுகள் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மானியமாக வரப்பெற்ற தொகை கடனாளியின் கடன் தொகையில் ஈடுசெய்யப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். காப்பீட்டுக்கான தொகை எதிர்காலத்தில் வரலாம்’’ என்றனர்.

தாட்கோ அலுவலர்கள் கூறும்போது, ‘‘மலைவாழ் மக்கள் தரப்பில் இருந்து ரூ.10,000 பங்குத்தொகையுடன் இக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு மூலம் நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் அல்லது அதற்கும் குறைவாக பால் உற்பத்தி இருக்கும். அதனைக் கொண்டு கடனை திருப்பிச் செலுத்த முடியாது. எனவேதான் கலப்பின கறவை மாடுகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு கிடைக்கும். எனினும் கடனை திருப்பிச் செலுத்தினால் மட்டுமே அடுத்த முறை கடனுதவி பெற முடியும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x