

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் க.சரஸ்வதி மறைவுக்கு நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மன்றக் கூட்டம் நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.சரஸ்வதி (55). துறைமுகம் மேற்குப் பகுதி துணைச்செயலாளராகவும் இருந்தார். அவர், கடந்த 18-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் உள்ள வீட்டில், அவரது உடலுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலினும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாதந்திர மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைமேயர் மு.மகேஷ்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில், கவுன்சிலர் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரங்கல் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பேசினர். இறுதியாக மேயரும், துணை மேயரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்த பின்னர் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாமன்றக் கூட்டம், நாளை (செப்.29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ``மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசு மருத்துவமனை மூலமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள, சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.