Published : 28 Sep 2023 06:12 AM
Last Updated : 28 Sep 2023 06:12 AM

‘இண்டியா’ கூட்டணி ஒற்றுமையாக உள்ளது: முதல்வரை சந்தித்த பிறகு வைகோ தகவல்

சென்னை: ‘இண்டியா’ கூட்டணியில் எவ்வித பிரச்சினையோ, சலசலப்போ இன்றிஒற்றுமையாக உள்ளது என்றமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணியின் செயல்பாடுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார். இந்த தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்துப் பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்தும், அது எந்த அளவு தமிழகத்தைப் பாதிக்கும் என்பது குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவினரையும் கணக்கெடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாதங்கள் குறித்தும் முதல்வரிடம் நான் எடுத்து கூறினேன். முதல்வர் அவர் கருத்தையும் தெரிவித்தார்.

அமைதியான நீரோடை: இதற்காகத்தான் வந்தேன். கூட்டணி குறித்து பேசவில்லை. திமுக கூட்டணியில்தான் தொடர்கிறேன். ‘இண்டியா’ கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. எந்தசலசலப்பும் இல்லை. அமைதியாக நீரோடை போன்று போகிறது. அதிமுக தரப்பில் தூது ஏதும் வரவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி பிளவுஎன்பது உண்மையானதா, நாடகமா என்பது காலப்போக்கில்தான் தெரியும். தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்டனர். இதனை குடியரசுத் தலைவரின் செயலரிடம் அளித்தபோது, உடனே பதில் தருவதாகக் கூறினார். தற்போது உள்துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

8 எம்.பி.க்கள் குறையலாம்: தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகத்துக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புஏற்படும். 8 எம்.பி.க்கள் குறையலாம். அதேநேரம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் எண்ணிக்கை உயரும். அப்படி வரும்போது இந்திய வரைபடத்தில் நம் எண்ணிக்கை குறைந்து, அதன்விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x