

சென்னை: ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் சென்னைநந்தனம் ஆவின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் 295 புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எந்தப் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தேவையோஅங்கெல்லாம் ஆய்வு செய்து, புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்களை நிறுவநடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த 3 மாதங்களில் 31,000-க்கும் மேற்பட்ட கால்நடை கடன்கள்வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் புதிய கறவை மாடுகள் வாங்க ஏற்பாடு செய்துகொடுத்து வருகிறோம். ஆவின் பொருட்கள் விற்பனையிலிருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, தற்போது குறித்த நேரத்தில் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்து இருக்கிறோம். இதன் விளைவாக, ஆவின்பொருட்கள் தினசரி விற்பனை ரூ.2.40 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் நிர்வாக செலவுகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். குறிப்பாக மின் சிக்கனம் மூலம் மட்டும் கடந்தமாதம் ரூ.35 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு மிகத் தரமான பால் அளிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு ஒரு ரூபாய்வீதம் ஊக்கத்தொகை வழங்குவது சில வாரங்களில் தொடங்கப்படும்.
சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பால் விலையைவிட ஆவின் பால் விலை குறைவுதான். கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அதேநேரத்தில், விற்பனை விலை உயர்த்தப்படாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான, சுத்தமான ஆவின் பொருட்களைத் தயாரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆவின் அலுவலகங்களில் ஆவின் பொருட்களைத் தயாரித்து, விற்பனைக்குக் கொடுப்பதற்காக ஆர்டர் பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புஉள்ளது என்றார்.
பேட்டியின்போது, ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.