Published : 28 Sep 2023 06:30 AM
Last Updated : 28 Sep 2023 06:30 AM
சென்னை: அரசமைப்புச் சட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியால் ஆபத்து என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமையகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மணிப்பூர் மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அங்கு நடைபெறும் கலவரத்தை அடக்க முடியாமல் அரசாங்கம் தோல்விஅடைந்துள்ளது.
அங்கு நடைபெறும் போதை பொருள் விற்பனையை ஊக்குவிப்பதே அம்மாநில முதல்வர்தான். அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மணிப்பூருக்கு பிரதமர் சென்றால் மட்டுமே பிரச்சினையை தீர்க்க முடியும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளவற்றில் 17 கட்சிகள் குறித்து பெரிய அளவுக்கு யாருக்கும் தெரியாது. அண்மையில் அதிமுககூட வெளியேறிஉள்ளது. ஆனால் போதிய கட்டமைப்புகளை உருவாக்கி இண்டியா கூட்டணி வலுவடைந்து வருகிறது. மத ரீதியான பேச்சை பிரதமர் பேசி வருகிறார்.
தற்போது சனாதன சர்ச்சை வெடித்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவற்றை ஏற்க முடியுமா. இதுகுறித்து பிரதமர் மோடிவிளக்க முடியுமா? அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமரானால் இந்தியா இரண்டாக நிச்சயம் பிரியும். அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. அவரால் மட்டுமே அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து இருக்கிறது. எதிர்க்கும் கட்சிகளை பாஜக அழித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் முழு அடைப்பு போன்றவற்றில் ஈடுபட வேண்டிய நிர்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். நதிநீர் பிரச்சினையில் கூட்டணியை வைத்து குழப்ப வேண்டியதில்லை. மத்திய அரசு தீர்வு காண வேண்டும். துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.
இந்த சந்திப்பின்போது, மாநிலதுணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமாணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT