Published : 02 Dec 2017 09:44 AM
Last Updated : 02 Dec 2017 09:44 AM

இன்று மிலாது நபி ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஒழுக்கம், கருணை, தொண்டுள்ளம் போன்ற உயர்ந்த விழுமியங்களை பின்பற்றி வாழ்ந்தவர் இறைத்தூதர் முகமது நபிகள்.

அவருடைய பிறந்த நாளை மிலாது நபி திருநாளாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த நன்னாளில், சமூகத்தில் அன்பு, அமைதி, நல்லிக்கணம் ஆகியவற்றை வளர்த் தெடுப்போம்.

முதல்வர் பழனிசாமி: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாக கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள். உலகில் அன்பு செழிக்கவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும், நபிகள் நாயகத்தின் அருட்போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: திருக்குரானும், நபிகள் நாயகத்தின் வாழ்வும் இரு கண்களைப் போல மக்களுக்கு தேவையான போதனைகளை, வாழ்வு முறையை கற்பிக்கின்றன. மிலாது நபி திருநாளில் மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்துடன் அன்பு, பொறுமை போன்ற நற்பண்புகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தொல்லை கொடுப்பவர்களையும், துன் பம் விளைவிப்பவர்களையும் மன்னிக் கும் பண்பு மனிதகுலத்துக்கு வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த நபிகள் நாயகம், அதை தன் வாழ்விலும் கடைப்பிடித்தார். அவரின் போதனைகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ‘எல்லா இழிவான செயல்களுக்கும் முதன்மையாக உள்ள மது, எல்லா பாவங்களின் மொத்தத் தொகுப்பு’ என்று கூறிய நபிகள் நாயகம், மது ஒழிப்பை வலியுறுத்தினார். மிலாது நபி நாளில் அவர் காட்டிய அறநெறியினை பின்பற்றி அனைவரும் அன்புடனும், சகோதர பாசத்துடனும் வாழ உறுதி ஏற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உலகம் செழித்திடவும், மானுடம் தழைத்திடவும் அமைதி, ஒற்றுமை, நட்புணர்வு ஆகியவை மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்பது நபிகளின் அருட்போதனை. வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்துக்கு உருவாக்கி கொடுத்த நபிகளின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு இதயப்பூர்வமான மிலாது நபி வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும், போதனைகளும் மக்களுக்கு நல்வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. எனவே, அவரின் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றி வாழ்வோம்.

சமக தலைவர் சரத்குமார்: மதச்சார்பின்மை கொள்கை கொண்ட நமது தேசத்துக்கு நபி கள் நாயகம் போதித்த சகிப்புத் தன்மை மிகவும் அவசியம். அந்த வகையில் அவரின் பிறந்த நாளை மிலாது நபி பண்டிகையாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அன்பு கலந்த நல்வாழ்த்துகள்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: மிலாது நபி நன்னாளில் நாட்டில் தீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் போன்றவை ஒழிந்து அமைதி சகிப்புத்தன்மை நிலவிட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த மிலாது நபி வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x