சீமான் | கோப்புப் படம்
சீமான் | கோப்புப் படம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நாம் தமிழர் கட்சிக்கு வலிமைதான்: சீமான் கருத்து

Published on

கும்பகோணம்: கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியது:

மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களுக்கான வளர்ச்சித் திட்டம் கிடையாது. இந்தத் தொகையைப் பெண்களின் முன்னேற்றத்துக்கான- நிரந்தர வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு பயன்படுத்தி இருக்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்குரிய நீரை திறக்குமாறு வலியுறுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடகாவில் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகளுக்கும் பெயர்தான் மாறுகிறதே தவிர, பொருளாதாரம், வெளியுறவு, மருத்துவம் என கொள்கைகள் அனைத்தும் ஒன்று தான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்தது வேடிக்கையானது.

இதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல் துறையால் உரிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிவதால், அரசு நெருக்கடி கொடுக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதால் நாம் தமிழர் கட்சிக்கு வலிமைதான் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in