

திருச்சி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் உள்ள சிறு தவறுகள், குறைகள்சரி செய்யப்பட்டு வருகின்றன என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல அளவிலான அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைஅமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமை வகித்தார்.
துறையின் முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, துறை ஆணையர் அமுதவல்லி, திருச்சி ஆட்சியர் மா.பிரதீப் குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் ஜெ.யூ.சந்திரகலா, கூடுதல் இயக்குநர் ச.ப.கார்த்திகா, இணை இயக்குநர் வீ.உமா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அமைச்சர் பி.கீதா ஜீவன், செய்தியாளர்களிடம் கூறியது: மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தில் உள்ள சிறு, சிறு தவறுகள், குறைகள் சரி செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத்தொகை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இ-சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதல் 2 நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரிசெய்யப்பட்டு மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மேல்முறையீடு பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. இ-சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களே போதுமானது. பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது அதன் தொடக்கத்தில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை சரி செய்து வருகிறோம்.
இ-சேவைமையங்களில் மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு வேறு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க பரிசீலனை செய்யப்படுமா? என அமைச்சர் கீதாஜீவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘மாதம் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கு இத்தொகை ஒரு பொருட்டே அல்ல. அதனால்தேவை உள்ளோருக்கு மட்டும்வழங்கப்படுகிறது’’ என்றார்.
முதியோர் தினவிழா: இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா திருச்சியில் நேற்றுநடைபெற்றது. திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமை வகித்து,
தமிழ்நாடு மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023-ஐ வெளியிட்டு, முதியோர்களுக்கான செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி, முதியோர்களை கவுரவித்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசும்போது, ‘‘முதியோரை பராமரிக்க, பாதுகாக்க ஸ்மார்ட் போன் செயலி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 5 கி.மீ சுற்றளவில்உள்ள ஆட்சியர், வட்டாட்சியர், மருத்துவர், வழக்கறிஞர், மருந்தகம் ஆகிய எண்களை பதிவுசெய்து கொண்டு, அவசரத்துக்கு உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
ஞாபக மறதி உள்ளவர்களுக்கு ‘மாத்திரை சாப்பிடும் நேரம்’ என குரல் பதிவு உஷார்படுத்தும். இச்செயலி தேவைக்கேற்ப மேம்படுத்தப்படும். இன்று வெளியிடப்பட்டுள்ள முதியோர் கொள்கை விளக்ககுறிப்பேடில் முதியவர்கள் எந்தளவுக்கு பாதுகாப்பாக, அரவணைப்பாக இருக்க வேண்டும். சொத்து பிரச்சினைகளை எப்படி தீர்க்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.