Published : 02 Dec 2017 05:10 PM
Last Updated : 02 Dec 2017 05:10 PM

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டு மக்களின் பசியைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிகவும் குறைவாக உள்ளது. இதை உயர்த்தித் தர வேண்டும் என்று 22 ஆண்டுகளாக எழுப்பப்படும் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் பணியிலிருந்த போது வாங்கிய ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அதே முறையில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக மத்திய அரசால் 1952-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின்படி மிகக் குறைந்த தொகையே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1600 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் 1995-ம் ஆண்டு முதல்தான் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஓய்வூதியம் பெற்றுத் தருவதற்காக கடந்த 20 ஆண்டுகளில் பாமக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 11.03.2008 அன்று சென்னையில் உண்ணாநிலைப் போராட்டமும், 21.07.2008 அன்று வாழ்வுரிமை மாநாடும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பையும் பெற்றது. ஆனால், அப்போதிருந்த திமுக அரசு, நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கினால், மற்ற பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி அக்கோரிக்கையை நிராகரித்து விட்டது. அதை எதிர்த்து பாமக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அப்போதைய திமுக அரசின் நிலைப்பாடு மோசடியானதாகும். தமிழ்நாடு மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைக் குடிநீர் வாரியம், பாடநூல் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் போலவே நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதெல்லாம், நுகர்பொருள் வாணிபக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அது சாத்தியமில்லை என்று கூறி தமிழக அரசு நிராகரித்து வருகிறது. உண்மையில் முழு ஓய்வூதியம் வழங்கும் எந்த பொதுத்துறை நிறுவனமும் இலாபத்தில் இயங்கவில்லை. அதுமட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குவது என்பது தொழிலாளர் நலன் சம்பந்தப்பட்டதேயன்றி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் லாப, நஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதனால் அனைத்து பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்குவதே சரி.

நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கும் விஷயத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அரசுகளுமே இரட்டை வேடம் போடுகின்றன என்பதுதான் உண்மை. கடந்த 2001-ம் ஆண்டு இதுதொடர்பாக கோரிக்கை எழுந்தபோது, உணவுத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு 09.01.2001 அன்று வெளியிட்ட அறிக்கையில், இக்கோரிக்கையை திமுக அரசு கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டதாகவும், அதை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் உறுதியளித்தார். அதன்பின் 08.04.2008 அன்று தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக பாமக எழுப்பிய கோரிக்கைக்கு பதிலளித்த அப்போதைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். எனினும், 2011-ம் ஆண்டு மே மாதம் பதவியில் இருந்த வரை இந்த இரு வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

அதேபோல், நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் அதிமுக சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதேபோல், 2007-ம் ஆண்டும் அறிக்கை வெளியிட்டு போராட்டம் நடத்திய அதிமுக, அதன்பின் 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து ஆறரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை நுகர்பொருள் வாணிபக்கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை.

மக்களுக்காக அரசு நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதம் ரூ.1600 ஓய்வூதியம் வழங்குவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து நுகர்பொருள் வாணிபக்கழகப் பணியாளர்களுக்கும், மற்ற பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x