Published : 20 Dec 2017 07:06 PM
Last Updated : 20 Dec 2017 07:06 PM

அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்: ஜெயலலிதா வீடியோ குறித்து தமிழிசை சாடல்

ஜெயலலிதா மரியாதையை குலைக்கும் வகையில் வீடியோ வெளியாகி உள்ளது. இது அனைவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மனதை மிகவும் பாதிக்கும் அளவிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ படம் வெளியாகியிருக்கிறது. அவரது சுயமரியாதையை குலைக்கும் வகையில் வெளியாகியிருக்கும் வீடியோ பெண் என்ற முறையிலும், பெண்கள் நல மருத்துவர் என்ற முறையிலும், ஜெயலலிதாவின் ஆளுமையை சிறு வயதில் இருந்தே கண்காணித்து வளர்ந்த பெண் அரசியல்வாதி என்ற முறையிலும் என் மனதை கலங்கடிக்கிறது.

எத்தகைய நம்பிக்கை துரோகம் இது என்பதை ஏற்க என் மனம் மறுக்கிறது. சுயநலத்திற்காக, ஓரு அரசியல் வெற்றிக்காக, ஓட்டுக்களையும் வாங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறுக்கத்தக்க அரசியலுக்கு ஓரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

இதே தமிழக மக்கள் கொடுத்த அதிகாரத்தில் இருந்த அம்மையாரை ஏமாற்றி இன்று அதே ஏமாற்று வித்தையை அதே தமிழக மக்களிடம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை இனிமேலும் தமிழக மக்கள் ஒப்புக் கொள்ள கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

முதலில் இந்த வீடியோ உண்மையானதா இல்லையா என்பது கேள்வி? எடுக்கப்பட்ட தினம் என்ன என்பது அடுத்த கேள்வி? எடுத்தவர் யார் என்ற கேள்வி மனதில் எழுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிக அபாயகரமான நிலையில் இருந்ததார் என்று சொல்லியிருந்தார் மருத்துவனை தலைவர் பிரதாப் ரெட்டி.

அப்படி என்றால் எத்தனை நாட்கள் சிகிச்சைக்குப் பின் இப்படிப்பட்ட பழரசம் குடிக்கும் நிலைக்கு முன்னேறினார்? அப்படி இந்த அளவுக்கு முன்னேறியவரின் உயிரை குடித்தது எத்தகைய சூழ்நிலை? இத்தகைய சூழ்நிலைக்கு தேறி வந்தவர் பின்பு எத்தகைய சூழலில் மரணத்தை தழுவினார்?

மருத்துவமனையில் படம் எடுக்க வேண்டுமென்றால் மருத்துவமனையின் ஒப்புதலும் வேண்டும்.

சிகிச்சை எடுத்துக் கொள்பவரின் ஒப்புதலும் வேண்டும். அது பெறப்பட்டதா? அப்படி பெறவில்லை என்றால் அது மாபெரும் குற்றமாகும். ஒரு அரசியல் தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது ஒன்றும் குற்றமல்ல. நடக்காததும் அல்ல. ஆக இத்தகைய சூழலுக்கு முதல்வர் முன்னேறியிருந்தார் என்றால் கண்ணியமான முறையில் அப்போது புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கலாமே?

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சை படங்கள் வெளியாயினவே. ஏன் இந்த அளவிற்கு முன்னேறியவரின் சிகிச்சை முறைகளும், படங்களும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்ற பல பல கேள்விகள் எழும்பாமல் இல்லை.

அதுமட்டுமல்ல, இன்று நேற்றல்ல, சசிகலா, தினகரன் குடும்பத்தினர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டது. கடந்த ஓராண்டாக தமிழக மக்கள் சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையில் இந்த வீடியோ இன்று வெளியிடுவதன் நோக்கம் என்ன? நாளை நடக்கும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கான யுக்திதானே இது.

அதுமட்டுமல்ல, இன்று கிருஷ்ணப்பிரியா வெற்றிவேலுக்கு கண்டனம் தெரிவிக்கிறார். வெற்றிவேல் கைக்கு வீடியோ எப்படிச் சென்றது? தினகரன் கொடுக்காமல் எப்படிச் சென்றது? வெற்றிவேல் சொல்கிறார் இது வெளியிடப்படுவது தினகரனுக்குத் தெரியாது என்று.

ஆனால் புகழேந்தி இந்த வீடியோபற்றி தினகரனுக்கும், சசிகலாவிற்கும் தெரியும் என்கிறார். கிருஷ்ணப்பிரியா ஒன்றைச் சொல்கிறார் ஆக வெளியிட்ட பின்பு பிரச்சினை வெடிக்கிறது என்றவுடன் மற்ற நாடகம் அரங்கேறுகிறது.

இறந்தபின்பும் ஜெயலலிதாவின் புகழுக்கும், சுயமரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தை மக்கள் அடையாளம் காண வேண்டும். ஆக தமிழக மக்கள் இனிமேல் இது போன்ற எதிர்மறை அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x