

மதுரை: அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் உரிமைகளுக்கான மாநில கிளை சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கல்வித்துறைகளில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும். காவல்துறை உதவி எண் 100 மற்றும் 108 வாட்ஸ் அப் செயலி உருவாக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி பேசுவோர் புகார் கூறினால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
காது கேளாதோர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சொர்ணவேல், அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாவட்டத் தலைவர் பி.வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் ஏ.பாண்டி, தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாவட்ட கிளை துணைச் செயலாளர் எம். செல்வராஜ், துணைச் செயலாளர் ஜி. மணிகண்டன் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.இதனை, மதுரை மாநகராட்சி உறுப்பினர் டி.குமரவேல் துவக்கி வைத்தார்.