நியோ மேக்ஸ் இயக்குநர்கள் அனைவரையும் ஒரு மாதத்தில் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நியோ மேக்ஸ் இயக்குநர்கள் அனைவரையும் ஒரு மாதத்தில் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: நியோ-மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியோ-மேக்ஸ் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. மனுதாரரை போனில் மிரட்டி வருகின்றனர். இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “நியோ-மேக்ஸ் மோசடி தொடர்பாக 96 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை 11 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய இயக்குனர்களான கமலகண்ணன், சிங்கரவேலன் கைது செய்யப்பட்டுள்ளனர். 9,500 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “96 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 11 இயக்குநர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் அனைத்து இயக்குநர்களையும் கைது செய்து, அனைத்து சொத்து ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியது வரும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மாநில அளவில் குழு: நியோ மேக்ஸ் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். இதனால் மாநில அளவில் குழு அமைக்கலாம். இதற்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கைக்கும் தொடர்பில்லை. குழு அமைத்தாலும் போலீஸார் விசாரணையை தொடரலாம்’ என்றார். அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in