ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் தவறான தகவல்: பாதுகாப்புத் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் தவறான தகவல்: பாதுகாப்புத் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்ததாக பாதுகாப்புத் துறை மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன், வீரப்பன், ஈஸ்வரன் உள்பட 9 பேர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சியில் நடைபெற்ற ராணுவ வீரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றோம். ஆனால், தேர்வுப் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. இதுகுறித்து கேட்டதற்கு காலிப்பணியிடங்கள் இல்லை என்றனர். தேர்ச்சிப் பெற்ற எங்களுக்கு பணி வழங்காதது சட்டவிரோதம். பணி நியமனத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, எங்களை தகுதியானவர்களாக அறிவித்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் மூடி முத்திரையிட்ட உறையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அளித்த தகவல்கள் அனைத்தும் தவறானது. தவறான தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் அளித்துள்ளீர்கள். அரசு வழக்கறிஞர்களிடம் சில அதிகாரிகள் அளிக்கும் தகவல்கள் தவறாகவே இருக்கின்றன. சில அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு சரியான தகவல்களை அளிப்பதில்லை என்றார்.

தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர், கம்ப்யூட்டரில் பதிவான தகவல்கள் நீதிமன்றத்துக்கு தரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளிக்கலாமா? இப்படியிருக்கும்போது பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும்? பாதுகாப்புத் துறையின் சிஸ்டம் சரியில்லை. வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in