

தஞ்சை: "தமிழக அரசு, தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான் ஆளுநர். அவர் இங்கு சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது" என சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் சார்ஜா மண்டபம், மராட்டியர் தர்பார் மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது, "தஞ்சாவூரில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தர்பார் மண்டபத்தில் ரூ.9.12 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்ட அறிக்கையில் ஆளுநர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர். இதை ஆளுநர் அறிவிக்கவில்லை, தமிழக முதல்வர் தான் அறிவித்துள்ளார்.
அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக் கூடாது என அறியுறுத்தியுள்ளோம். தமிழக அரசு, தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான் ஆளுநர். அவர் இங்கு சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது.
தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை. மராட்டியர்கள், நாயக்கர்கள், கிருஷ்ண தேவராயர், சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் படையெடுத்தனர். ஆனால் இப்போது யாரும் படையெடுக்க முடியாது. தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி. எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே ஆளுநர் பெயரை அதிலிருந்து அகற்றச் சொல்லியுள்ளோம்.
பொது தணிக்கை குழு, வழங்கிய பட்டியலின் அடிப்படையில், கடந்த காலங்களில் எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. விரையச் செலவு, காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.