Published : 03 Dec 2017 07:36 AM
Last Updated : 03 Dec 2017 07:36 AM

கன்னியாகுமரி புயல் மீட்பு உள்ளிட்ட நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி: முதல்வர் கே.பழனிசாமி உத்தரவு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரிக்கு அருகில் ஒக்கி புயல் கடந்து சென்றது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. இதனால் மின் உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக சாலைகளும் சேதமடைந்துள்ளன.

தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதற்கான நிதியுதவியும் அவசியம். எனவே, நடந்து வரும் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.25 கோடி உடனடியாக விடுவிக்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தடையில்லா மின்சாரம்

சேதமடைந்த மின் உள்கட்டமைப்புகளை சீர் செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும். மின்வாரியம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சிகள் மற்றும் வருவாய்த் துறையினருக்கு இந்த ரூ.25 கோடி உடனடியாக வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணியில், பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழிவகைசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x