Published : 27 Sep 2023 06:37 AM
Last Updated : 27 Sep 2023 06:37 AM

மூளைச்சாவால் உறுப்புகளை தானமாக வழங்கிய வருவாய் துறை ஊழியர் உடலுக்கு அரசு மரியாதை: அமைச்சர், அதிகாரிகள் அஞ்சலி

வடிவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன் உள்ளிட்டோர்.

சின்னமனூர்: தேனி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் (43). இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ம் தேதி பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். சீலையம்பட்டி சப்பாணி கோயில் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு முட்டியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

பலத்த தலைக் காயத்துடன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கடந்த 24-ம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். வடிவேலின் சிறுநீரகம், கல்லீரல், கருவிழி, தோல் உள்ளிட்டவை அரசு ராஜாஜி மருத்துவமனை, அப்போலா மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த 23-ம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடிவேலின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்பு உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல் முறையாக மரியாதை: பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை தரப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு முதன் முதலாக இங்கு அரசு மரியாதை வழங்கப்படுகிறது. இதேபோல் உறுப்பு தானம் செய்வோருக்கு தமிழக அரசு சார்பில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் அளவிலான அலுவலர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x