Published : 27 Sep 2023 06:43 AM
Last Updated : 27 Sep 2023 06:43 AM
நாகப்பட்டினம்/ராமேசுவரம்: நாகை மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, மீன்கள், வலை உள்ளிட்ட ரூ.5 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரைச் சேர்ந்தவர் சக்திபாலன்(24). இவர், தனது பைபர் படகில், செருதூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(25), சூர்யா(19), சிரஞ்சீவி(20), புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன்(20) ஆகியோருடன் செப்.24-ம் தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 2 அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, செருதூர் மீனவர்களின் படகில் ஏறி, கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை தாக்கினர். பின்னர், அவர்களை மிரட்டி, 550 கிலோ வலை, 100 கிலோ மீன்கள், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த சக்திபாலன் உள்ளிட்ட 5 மீனவர்களும் நேற்று காலை செருதூர் கடற்கரைக்கு திரும்பினர். அவர்களை மீனவக் கிராம பஞ்சாயத்தார் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
செப்.23-ம் தேதி செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடற்கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி.தினகரன் கண்டனம்: இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒருபுறம் இலங்கை கடற்படையினர் என்றால், மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களது உடமைகளையும் மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படை தாக்குதல்: இதற்கிடையே எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இதில் பாலு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜஸ்டின் (50), சேகர் (55), ஓஸ்வெர்ட் (32), பிராங்க்ளின் (36) ஆகிய மீனவர்கள், கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி கற்களை வீசி மீனவர்களை விரட்டியடித்தனர். இதில் மீனவர் பிராங்க்ளின் காயமடைந்தார். இதையடுத்து மற்ற மீனவர்கள் அவசரமாக படகை கரைக்குத் திருப்பி, பிராங்க்ளினை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மெரைன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT