

சென்னை: நாட்டில் 40 சதவீத மின் வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தியாவதாகவும், புதிதாக வரும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மின் வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக மின் வாகனங்களின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு தகவல்படி இருசக்கர வாகனங்களில் 70 சதவீதம் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் மின் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை என்றதகவல் கிடைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
மின் வாகன உற்பத்தியில் இந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு, பிரம்மாண்ட வெற்றியை தமிழகம் பெறும். முதல்வரை பொறுத்தவரை, பல புதிய தொழில்துறை நிறுவனங்களை இங்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளார்.
ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மகத்தான முன்னேற்றத்தை மின் வாகனத்துறை அடையும். தற்போது கோவைஉள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்வாகன தயாரிப்பு நடைபெறுகிறது.முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது வேலை வாய்ப்புகள் இன்னும்அதிகளவில் தமிழகத்துக்கு வரும்.
குறிப்பாக அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதை நோக்கி எங்கள்செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளோம். தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களும் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியைச் சுற்றியே உள்ளன.
திருச்சிமற்றும் கோவையைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளும் மிகப்பெரியவளர்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. புதிதாக 3வளர்ச்சித் திட்டங்கள் வர உள்ளன.அதற்கான ஆலோசனையில் தற்போது உள்ளோம். இந்த ஆட்சியில்,புதி்ய தொழிற்சாலைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஓலா, பாஷ் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.