Published : 27 Sep 2023 06:08 AM
Last Updated : 27 Sep 2023 06:08 AM

மாநிலம் தழுவிய அளவில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்: அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் தலைமையகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் (சிஐடியு) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டுநவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதேபோல், மருத்துவப் படி உயர்வு,குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம்,குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை,பல்லவன் சாலையில் நேற்று காலை முதலே நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்கள் திரண்டு வந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

கண்டனத்துக்குரியது: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வுவழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஓய்வு பெறும்போது வெறுங்கையுடன் அனுப்பக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம்.

எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடினோம். எங்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதும், மேல்முறையீடு செய்து அகவிலைப்படி உயர்வை வழங்காமல் அரசு காலம் தாழ்த்துகிறது.

அனைத்து பொதுத் துறையைச் சார்ந்த ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கும் அரசு, போக்குவரத்துத் துறையினருக்கு மட்டும் வழங்காதது கண்டனத்துக்குரியது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன்,பொருளாளர் வரதராஜன், துணை பொதுச் செயலாளர் வீரராகவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x