அக்டோபருக்குள் பேருந்து தட சாலைகளை சீரமைக்க வேண்டும்; பருவமழை முடியும் வரை சாலை வெட்டு பணிகளுக்கு அனுமதி கூடாது: தலைமைச் செயலர்

அக்டோபருக்குள் பேருந்து தட சாலைகளை சீரமைக்க வேண்டும்; பருவமழை முடியும் வரை சாலை வெட்டு பணிகளுக்கு அனுமதி கூடாது: தலைமைச் செயலர்
Updated on
1 min read

சென்னை: வடகிழக்கு பருவமழை முடியும் வரை சாலை வெட்டு பணிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என துறை சார்ந்த அலுவலர்களுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அவ்வப்போது ஆய்வுக்கூட்டம் நடத்தி கண்காணிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், கடந்த 22-ம்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சேவைத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார். அதில்துறை சார்ந்த அதிகாரிகள் முன்வைத்த கருத்துகளைப் பெற்று,தலைமைச் செயலர் அறிவுறுத்தியவை:

கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுகள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும், சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் துரிதமாக அக்.10-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

சாலை வெட்டுப் பணிகளை வரும் 30-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். அனைத்து பேருந்து தடசாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும். நியூ ஆவடி சாலையில் மின்வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை வெட்டு பணிகள் முடிக்கப்பட்டதால், சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டுபணிக்கு அனுமதி வழங்க வேண்டாம். ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் செப். 30-ம் தேதிக்குள் சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும். முகலிவாக்கம் பகுதிகளில் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கத்திபாரா அருகில் அக். 15-ம் தேதிக்குள் சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in