

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத். இவரது மனைவி ஜோதி (32). நெஞ்சு வலி இருந்ததால், அப்பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜோதி அனுமதிக்கப்பட்டார்.
ரத்தநாள அடைப்புக்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்துள்ளனர். நுண்துளை மூலமாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை வலது கை மற்றும் 2 கால்களில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்த உறைதல் ஏற்பட்டதால், ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தநாள அடைப்புகள் பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது.
அதேநேரம், ரத்த உறைதல் காரணமாக, வலது கை மற்றும் 2 கால்கள் மிகவும் மோசடைந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதனால், அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற, வலது கையை மருத்துவர்கள் நேற்று அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பெண்ணின் கணவர் ஜீனாத் கூறுகையில், ``தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கு, ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு அதிக கட்டணம் கேட்டதால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தோம். பரிசோதனையில் ரத்தநாள பாதிப்பு இல்லையென மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், கை, கால்களில் ரத்த உறைதல் எனக்கூறி சதைகளை அறுத்து வைத்துள்ளனர். தற்போது, உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும். கால்களில் ரத்தம் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டியிருக்குமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதய பரிசோதனைக்காக வந்தோம். ஆனால், கை, கால்களை அகற்றுகின்றனர். தவறான மருந்தோ அல்லது கவனக் குறைவான சிகிச்சையோ அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.
மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், ``இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணுக்கு 2 நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இல்லாத நிலையில், அவருக்கு ரத்த உறைதல் நோய்தான் நெஞ்சு வலிக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.
நிபுணர்கள் தொடர் கண்காணிப்பு: வலது கை ரத்த உறைவினால் செயலிழந்து விட்டதால், முழங்கைக்கு மேல் வரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்'' என்றார்.
2 மாதங்களுக்கு முன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்தது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டது. அங்கு குழந்தையின் வலது கை தோல் பட்டை வரை அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சையிலிருந்த வந்த அக்குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.