Published : 27 Sep 2023 06:12 AM
Last Updated : 27 Sep 2023 06:12 AM

பணி வழங்கப்படும் என அமைச்சர் உறுதி: சென்னையில் 2 நாட்களாக நடந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை: பணி வழங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்ததை தொடர்ந்து சென்னையில் 2 நாட்களாக நடந்த செவிலியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 3 நாள் இரவு - பகல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே செவிலியர்கள் நேற்று முன்தினம் தொடங்கினர்.

எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் சுமார் 1,000 செவிலியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் இருந்த செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.

2-வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 17 செவிலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, “கரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 300 மருத்துவர்கள், 6,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அதில், 300 மருத்துவர்கள், 3,000 செவிலியர்கள் நிரந்தர தன்மையுடைய பணிக்கு மாற்றப்பட்டனர்.

ஆனால், 3 ஆண்டு பணி செய்த மற்ற 3,290 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு எங்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்” என்றனர்.

இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்றிரவு சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து செவிலியர்கள் தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். தகுதியானவர்களை விரைவில் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x