சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.பி.எம்.பி.எழிலரசன்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.பி.எம்.பி.எழிலரசன்.
Updated on
2 min read

தாம்பரம்/காஞ்சி/சென்னை: தாம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் நேற்று உயிரிழந்தார். வாலாஜாபாத்தை அடுத்த அளவூர் கிராமம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (57). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் வாரணவாசி கவுன்சிலராகவும் இருந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், நேற்று முன்தினம், தேனாம்பேட்டையில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அப்போது, அவருடன் 2 கார்களில் நாகராஜனும் அவரது ஆதரவாளர்களும் சென்றனர். வேங்கைவாசலில் மகள் வீட்டுக்கு அழகிரி சென்றதும், நாகராஜன் மற்றும் கட்சியினர், காஞ்சிபுரம் செல்வதற்காக தாம்பரம்– வேளச்சேரி சாலை வழியாக சென்றனர்.

அளவூர் நாகராஜன்
அளவூர் நாகராஜன்

அப்போது இரவு, 11:30 மணிக்கு, காமராஜபுரம் பேருந்து நிறுத்தத்தை அடுத்து, சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடை அருகே காரை நிறுத்தியபோது அதே கடையில் சாப்பிட்ட இருவர், சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் வந்த லோடு வேனை இயக்கினர். அது கட்டுப்பாட்டை இழந்து, தள்ளுவண்டி கடை மீதும், நாகராஜன் மீதும் மோதியதில், நாகராஜன் படுகாயமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலர் அமாவாசை (61), தள்ளுவண்டி கடைகாரர் குமார் (56), ஆகியோரும் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து நாகராஜன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. போலீஸார் நாகராஜனின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லோடு வேன் ஓட்டுநரான நவநீதன் (19), என்பவர் உணவு அருந்தி விட்டு வாகனத்தில் ஏறுவதற்குள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜகீழ்ப்பாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்த கானா பாடகரான உதயசீலன் (23) என்பவர், தவறுதலாக வேனை இயக்கியதில், விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உதயசீலனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகராஜ் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in