Published : 27 Dec 2017 11:10 AM
Last Updated : 27 Dec 2017 11:10 AM

இங்கே இவர்கள் இப்படி: ‘இது எனக்கு ஐம்பது வருட பந்தம்’ - 77 வயதிலும் கடிதம் எழுதும் மழபாடி ராஜாராம்

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கடிதம் எழுதி குசலம் விசாரிக்கும் வழக்கத்தையும் விழுங்கிவிட்டது. அலைபேசியும், இ-மெயிலும் கடிதப் போக்குவரத்தின் கழுத்தை நெரித்து விட்டன. ஆனாலும், பழமையை மறக்காத ஒருசிலர் இன்னமும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் மழபாடி ராஜாராம்.

50 வருடங்களுக்கும் மேலாக..

திருச்சி வானொலி நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் மழபாடி ராஜாராம். சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், குழந்தை எழுத்தாளர், இதழ் விமர்சகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். இவரது இயற்பெயர் ஜெயராமன். அரியலூர் மாவட்டம் திருமழபாடியைச் சேர்ந்த இவர் இப்போது திருச்சியில் வசிக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான ராஜாராம் இன்னமும் தனது உறவுகளுக்கும் நட்பு வட்டத்துக்கும் கடிதங்கள் மூலமே தகவல்களைச் சொல்கிறார்; வாழ்த்தட்டைகள் மூலமே வாழ்த்துகிறார்.

“இந்தக் காலத்திலும் கடிதம் எழுதிக் கொண்டி ருக்கிறீர்களே..?” என்று கேட்டதுதான் தாமதம், மள மளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார் மனிதர். “இன்றைக்கு நேற்றைய பந்தமா.. கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நான் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். 1966-ல், பத்திரிகைகளுக்கு கதை, துணுக்குகளை எழுதியனுப்ப ஆரம்பித்தேன். அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்கிறது.

வரலாற்று ஆவணம்

கடிதம் எழுதுதல் ஒரு கலை. அது ஒரு வரலாற்றுப் பதிவும்கூட.1970-களில், திருச்சி வானொலியின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த மாயாவி என்பவர் (அவரது நிஜப்பெயர் நினைவில் இல்லை) ‘உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் எப்போதும் எழுத்துக்களாக பதிவுசெய்யுங்கள்’ என்றார். அதை இந்த 77 வயதிலும் தொடர்கிறேன்.

கடிதச் செலவுக்காக மாதம் ஐநூறு ரூபாயை ஒதுக்குகிறேன். மாதா மாதம் ஓய்வூதியம் வாங்க மறந்தாலும் கடிதங்களை வாங்க மறப்பதில்லை. நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களுக்கு மறக்காமல் எனது கைப்படவே படம் வரைந்து வாழ்த்து அனுப்புவேன். ‘தபால் துறையே உன்னாலதாம்பா ஓடுது’ என்று எனது நண்பர்கள்கூட கிண்டலடிப்பார்கள். கடிதம் என்பது ஒரு வரலாற்று ஆவணம். நமக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி நினைக்கவும் சிந்திக்கவும் அவர் அனுப்பிய கடிதங்கள் வழிசொல்லும். இப்போதுள்ள அலைபேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அத்தகைய உணர்வுகளை நமக்குத் தராது” என்கிறார் ராஜாராம்.

கடிதத்தில் கிடைக்கும் ஸ்பரிசம்

“இன்றைய தலைமுறைக்கு கடிதம் எழுதத் தெரியாது. இது துரதிருஷ்டவசமானது” என்று ஆதங்கப்படும் ராஜராம், “நமது குழந்தைகளை கடிதம் எழுதப் பழக்க வேண்டும். நான் நடத்தும் ‘மழபாடி டைம்ஸ்’ எனும் குழந்தைகள் சிற்றிதழுடன் அஞ்சல் அட்டை ஒன்றையும் இணைத்து அனுப்பு கிறேன். இதழ் குறித்த விமர்சனங்களை அதில் எழுதி அனுப்புங்கள் என்கிறேன். ஆனால், இதுவரை ஒருவர்கூட விமர்சனக் கடிதத்தை எழுதவில்லை.

நான் அனுப்பும் வாழ்த்துக்களுக்கும் கடிதங்களுக்கும் நண்பர்கள் போன் மூலம் நன்றி பாராட்டுகிறார்கள். அவர்களைப் போல நானும் அவர்களுக்கு போனில் வாழ்த்துச் சொல்ல முடியும். ஆனால், நான் அப்படிச் செய்வதில்லை. ஏனென்றால், கடிதம் தரும் ஸ்பரிசத்தை வேறு எந்தத் தகவல் தொடர்பு சாதனமும் தராது” என்கிறார்.

சிலிர்க்க வைக்கும் சின்சியாரிட்டி

கடிதங்கள் மூலம் அன்பைப் பரிமாறிக்கொள்வதற்காகவே 3 நோட்டுகள் முழுக்க முகவரிகளைச் சேகரித்து வைத்திருக்கிறார் ராஜாராம். அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் பிறந்த நாள், மண நாள் உள்ளிட்ட விவரங்களும் இருக்கின்றன. எந்தத் தேதியில் யார் வீட்டில் என்ன விசேஷம் என்பதை முன்கூட்டியே பார்த்து வாழ்த்து அட்டைகளை அனுப்பிவைக்கிறார்.

கடிதமோ வாழ்த்து அட்டையோ எதையும் இவர் ஏனோ தானோவென்று எழுதி அனுப்புவதில்லை. பள்ளிக்கூட மாணவனைப் போல கலர் கலராய் ஸ்கெட்ச் பயன்படுத்தி படம் வரைந்து, பயனுள்ள கருத்துக்களை அக்கறை கலந்த அழகுடன் எழுதி அனுப்பும் இவரது சின்சியாரிட்டி உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x