

மதுரை: ‘தமிழக மக்கள் நலன் மீது பிரதமர் மோடி தனி அக்கறை செலுத்தி வருகிறார்’ என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் கூறினார்.
மதுரையில் பிரதமர் மோடியின் ரோஜ்கார் மேளா மற்றும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அரசு பணி நியமன ஆணை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா மடீட்சியாக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், தென் மாவட்டங்களை சேர்ந்த 229 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 50-க்கும் மேற்பட்டோருக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, "இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி ரோஜ்கார் மேளா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டம் பட்டதாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழக மக்கள் பயன் அடைந்து உள்ளனர். பிரதமர் மோடி தமிழக மக்கள் நலன் மீது தனி அக்கறை செலுத்தி வருகிறார். இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும்” என்றார்.
விழாவில் எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குநர் ஹனுமந்த் ராவ், மத்திய அரசு ஜிஎஸ்டி இயக்குநர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் அனுப், அஞ்சல்துறை பொது மேலாளர் ஜெயசங்கர், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் நவீன் அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.