

பொள்ளாச்சி: அதிநவீன கருவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சி.டி.ஸ்கேன் எடுக்க தொழில்நுட்ப பணியாளர்களும், பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்க கதிரியக்க நிபுணரும் இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க முடியாமல் தனியார் ஸ்கேன் மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்து வமனைக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
சுற்றுவட்டார கிராமப்புற மற்றும் மலைப் பகுதி மக்களின் மருத்துவ தேவைக்கான முழு நம்பிக்கையாக இருக்கும் இந்த மருத்துவமனையில், நோயை துல்லியமாக கண்டறிந்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘சி.டி. ஸ்கேன்’ வசதி ஏற்படுத்தப்பட்டது.
விபத்து காயம், எலும்பு முறிவு, மென்மையான திசுக்கள், தசைகள், ரத்த குழாய், நுரையீரல், மார்பு உறுப்புகள், வயிறு, இடுப்பு பகுதி போன்றவற்றில் பாதிப்பு உள்ளதா என துல்லியமாக கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு முறை தேசிய தரச்சான்றிதழ் பெற்ற இந்த மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதி, அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி இருந்தும் இரவு நேரத்தில் அவற்றை நோயாளிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இரவு நேர பணிக்கு சி.டி. ஸ்கேன் மருத்துவப் பிரிவில் ஊழியர்கள் மற்றும் ரேடியாலஜிஸ்ட் இல்லாததால், சி.டி. ஸ்கேன் எடுக்க தனியார் மையத்தை நாட வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. வால்பாறை, பொள்ளாச்சி, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 10 பேர் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
பாலக்காடு, திருச்சூர், கோவை, பல்லடம், தாராபுரம், உடுமலை, வால்பாறை ஆகிய 7 நெடுஞ்சாலைகள் பொள்ளாச்சி நகரை இணைக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
விபத்தில் சிக்கியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க சி.டி. ஸ்கேன் பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால் பகல் நேரத்துக்கு மட்டுமே ரேடியாலஜிஸ்ட் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடம் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரவு நேர பணியில் ரேடியாலஜிஸ்ட் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
இதுகுறித்து நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் ஆர்.வெள்ளை நடராஜ் கூறும்போது,‘‘பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பகல் நேரத்தில் மட்டுமே சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தனியார் மருத்துவமனையில் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் சி.டி. ஸ்கேன் எடுக்க தேவையான ஊழியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்’’ என்றார்.