Published : 26 Sep 2023 06:15 AM
Last Updated : 26 Sep 2023 06:15 AM
நாகப்பட்டினம்: திருக்குவளை அருகே காய்ந்த குறுவை நெற்பயிர்கள் நேற்று டிராக்டர் மூலம் அழிக்கப்படுவதைப் பார்த்து மனமுடைந்த விவசாயி நெஞ்சுவலியால் வயலிலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரைச் சேர்ந்தவர் எம்.கே.ராஜ்குமார்(47), இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால், சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்புக்காக காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழிக்கும் பணி நேற்று நடந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாருக்கு ரூபாவதி(40) என்ற மனைவியும், 13 வயதில் மகனும் உள்ளனர். உயிரிழந்த ராஜ்குமாரின் உடலுக்கு காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் உள்ளிட்ட விவசாயிகள் நெற்கதிர்களால் ஆன மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தனபாலன் கூறியது: ராஜ்குமாரைபோல ஆயிரக்கணக்கான விவசாயிகள், காய்ந்த பயிர்களைப் பார்த்து, மன வேதனையில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறுவை பயிர்களுக்கு உரிய நீரை விடுவித்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
பழனிசாமி வலியுறுத்தல்: திருக்குவளையில் பயிர்கள் கருகிய வேதனையில் விவசாயி ராஜ்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, மத்திய அமைச்சரைப் பார்ப்பது, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு செல்வது என்று காலதாமதமாக அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டார்.
குறுவை சாகுபடிக்கு அரசு காப்பீடு அறிவிக்காததால், இன்று டெல்டா மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜ்குமார், கருகிய தன்னுடைய நெற்பயிரை பார்த்து மனவேதனையில் உயிரிழந்துள்ளார்.
விவசாயி ராஜ்குமார் மரணத்துக்கான முழு பொறுப்பை திமுக அரசு ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்துக்கு, உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT