Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

ஆளில்லா தீவு கூட்டங்களில் மீனவர்களை தேட கப்பல்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

மாயமான மீனவர்களை ஆளில்லாத் தீவுகளில் கப்பல் மூலம் தேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் தஞ்சமடைந்த மீனவர்களுக்கு உதவ அதிகாரிகளை அனுப்பியிருக்கிறோம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதால் மீனவர்கள் படகில் திரும்பி வரத் தயங்குகிறார்கள். சேதமடைந்த படகுகளை சீரமைக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், உணவு பொருட்களுக்கும் ஏற்பாடு செய்திருக் கிறோம்.

கப்பல் ஏற்பாடு

வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய 16 படகுகள் தமிழகத்துக்கு புறப்பட்டு விட்டன. மேலும், 12 படகுகள் புறப்படத் தயாராகி வருகின்றன. கடல் நிலையைப்பற்றி முழுமையாக விவரம் தெரிந்த 25 மீனவர்களை அழைத்துச் சென்று தேடுவதற்காக பெரிய கப்பல் வேண்டும் என்றார்கள். ராணுவ அமைச்சரிடம் பேசி கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக உள்ளது. விரைவில் மீனவர்களுடன் இக்கப்பல் புறப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பில் தமிழகத்தில் அதிக விபரம் பெற்றவர்கள் தூத்தூர் மீனவர்கள் என்பதால் அவர்கள் கப்பலில் பயணிக்க பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. உயிர் பலியில் பாகுபாடு காட்டாமல் கேரள அரசு கொடுப்பதுபோல் தமிழக அரசும் நிவாரணம் வழங்க வேண்டும்.

சேதமடைந்த வாழை ஒன்றுக்கு ரூ. 3 முதல் 7 ரூபாய் வரை இழப்பீடு கொடுப்பதாக கூறுவது விவசாயிகளை அவமானப்படுத்துவதாகும். மலைப்பகுதியில் மிளகு போன்ற பயிர்கள் அழிந்துவிட்டன. மலைவாழ் மக்களின் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கடியப்பட்டினம் மீனவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x