

சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐவளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதியஉயர்வு, மே மாத ஊதியம் வழங்குதல், பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து சிவகங்கை மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றிவருகிறோம். மாதம் ரூ.10 ஆயிரம்ஊதியத்தில் வாரத்துக்கு 3அரை நாட்களும், மாதத்துக்கு12 அரை நாட்களும் பணிபுரிகிறோம். இதை வைத்து எங்களதுகுடும்பத்தின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. பணிநிரந்தரம் செய்யக் கோரி பலபோராட்டங்களை நடத்தி இருக்கிறோம். ஆனாலும், அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருக்கிறது.
மேலும், 12 ஆண்டுகளாக மே மாதம் ஊதியம் இல்லாமலேயே பணியாற்றி இருக்கிறோம். இதுகுறித்து, அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டோம். நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஒவ்வொரு முறை போராட்டத்தில் ஈடுபடும்போது, அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பிகலைந்து செல்கிறோம்.
ஆனால்,அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை. எங்களது கோரிக்கைகளை ஏற்று அரசு அறிவிப்பாக வெளியிடும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று அவர் கூறினார்.