Published : 26 Sep 2023 06:05 AM
Last Updated : 26 Sep 2023 06:05 AM

உறுப்பு கொடையாளிகளுக்கு கவுரவம் கவுரவம்: முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு முத்தரசன், கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரா.முத்தரசன்: தம் உடல் உறுப்புகளை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றும் வகையில், இறக்கும் முன்பு உறுப்பு தானம் செய்வோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனமுதல்வர் அறிவித்திருக்கிறார். நாட்டிலேயே முன்னுதாரணமான இந்த முயற்சியை வரவேற்கிறோம்.

உறுப்பு தானம் மூலம் பலருக்கு வாழ்வு அளிக்கும் அரும்பணியில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழலிலும் அவர்களது உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகிறது. தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் மேன்மேலும் தொடரட்டும்.

கமல்ஹாசன்: பிரியத்துக்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர்களை காக்க முன்வருவது மகத்தான தியாகம். இதைப் போற்றும் வகையில், உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். முதல்வரின் இந்த அறிவிப்பு, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x