Published : 26 Sep 2023 06:20 AM
Last Updated : 26 Sep 2023 06:20 AM
திருவள்ளூர்: மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால், கொசஸ்தலை கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரியில், கொசஸ்தலை ஆற்று நீர் மற்றும் பூண்டி ஏரியை ஒட்டியுள்ள ஆந்திர மலைப்பகுதிகள் மற்றும் தமிழக வனப்பகுதிகள் உள்ளிட்டவை அடங்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு வழங்கும் கிருஷ்ணாநீர் ஆகியவை சேமிக்கப்பட்டு, பிறகு அவை கால்வாய்கள் மூலம் புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீப நாட்களாக திருவள்ளூரில் மழை பெய்து வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் என, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் விநாடிக்கு 1,520 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆகவே 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு 2,792 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 33.90 அடியாகவும் இருந்தது.
எனவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16 மதகுகள் கொண்ட இந்த ஏரியில் நேற்று மாலை இரு மதகுகளில் இருந்தும் விநாடிக்கு 1,000 கனஅடி உபரிநீரை நீர்வள ஆதாரத் துறையின் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம் முன்னிலையில், நீர்வளத் துறை களப்பணியாளர்கள் திறந்தனர்.
இதைத்தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் உட்பட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT