கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி, திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 10 கி.மீ. தூர மாரத்தான் போட்டி ஆலந்தூர் நீதிமன்றம் அருகே தொடங்கியது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமையேற்றார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வடக்கு பகுதி திமுகசெயலாளர் பி.குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாரத்தான் போட்டியை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சட்டமன்றஉறுப்பினர் இ.கருணாநிதி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு 9 கிராம்தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
