

சென்னை: போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தீவிர வயிற்று வலி மற்றும் அதை சார்ந்த பாதிப்புகளுடன் 13 வயதான சிறுமி ஒருவர் சமீபத்தில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், அவரதுவயிற்றில் பந்து போன்று முடி திரண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனால் சிறுகுடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சேதமாகக் கூடிய நிலை இருந்தது. இந்தநோய் ராபுன்சல் நோய் என்றுஅழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை வேண்டியது அவசியம் ஆகும்.
அதை கருத்தில்கொண்டு மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பிரகாஷ் அகர்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுமிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை செய்துவயிற்றுக்குள் இருந்த தலைமுடியை அகற்றினர்.
ஒருவர் தனது தலைமுடியை உட்கொள்வது என்பது மனநல பாதிப்புடன் தொடர்புடையது. இதை டிரைகோபேகியா எனமருத்துவத் துறையினர் சொல்கின்றனர். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு மனநல சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்க வேண்டும். ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுமிக்கு குறைந்த கட்டணத்தில் அறுவை சிகிச்சையும், மனநலசிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.