

சென்னை: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பில்‘சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.
ஓபிசி பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார். தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உட்பட ‘இண்டியா’ கூட்டணியில் அங்கும் வகிக்கும் தமிழக கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “சாதிவாரி கணக்கெடுப்பை முக்கிய பிரச்சினையாக கருதி ராகுல்காந்தி, பரப்புரைநடத்தி வருகிறார். கீழ்நிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தவே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் வேண்டும் என்கிறோம்.
ஆனால், சாதியை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்யக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யமுடியும். இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வும் முன்னேற்றம் அடையும்” என்றார்.
வைகோ பேசும்போது, “70 சதவீத மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு அதளபாதாளத்தில் உள்ளது என்பதைதான் ராகுல்காந்தி எடுத்து கூறுகிறார். இதில், இடஒதுக்கீட்டின் மூலம் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகதான் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வந்தால், வரவிருக்கும் தேர்தலில் தமிழகம் 8 நாடாளுமன்ற இடங்களை இழக்கும். மத்திய பிரதேசம், பிஹார், உத்தரபிரதேசம் மூலம் பாஜகஏராளமான இடங்களை பிடிக்கும். குடியரசு தலைவர் அமைப்பை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் குடியரசு தலைவர்தேர்தல் உடன் மாநிலங்களவை, மக்களவை தேர்தலையும் ஒன்றாக நடத்தலாம் என நினைக்கிறார் மோடி’’ என்றார்.