

கோவை: கோவையில் காந்திபுரம் (பாரதியார் சாலை), உக்கடம், சிங்காநல்லூர், சாயிபாபாகாலனி ஆகிய இடங்களில் நகரப் பேருந்து நிலையங்கள் உள்ளன. காந்திபுரம்நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம், சத்தி சாலையில் ஆம்னி பேருந்துநிலையம் உள்ளது. சிங்காநல்லூர் பேருந்துநிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநகரில் உள்ள சாலைகளில் காலை, மாலை நேரங்களில் நிலவும் நெரிசலுக்கு பேருந்து போக்குவரத்தும் காரணமாக உள்ளது. உள்ளூர், வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் போன்றவை அடுத்தடுத்து செல்வதால் வாகன நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநகரில் உள்ள பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, அப்போதைய கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில்ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல் அன்ட் டி பைபாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழ 300 பேருந்துகளை நிறுத்தும்வகையிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கிடையே, மொத்த மதிப்பீட்டில் ரூ.40 கோடி வரை செலவிடப்பட்டு கட்டுமானத்தின் ஒரு பகுதி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.
பேருந்து நிலையம் தேவை: வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமீட்புக் குழுவினர் கூறும்போது, ‘‘ பேருந்து நிலையம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் குழு தொடங்கியுள்ளோம். இக்குழுவின் மூலம் பேருந்து நிலையம் கட்ட வலியுறுத்தி, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மேயர், ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கவுள்ளோம். இத்திட்டப்பணியை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்’’ என்றனர்.
பன்னோக்கு மருத்துவமனை: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதற்கேற்ப அரசு மருத்துவமனையின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடங்களில் ஏற்படுத்தலாம். அதற்கான இடவசதி இங்கு உள்ளது. இங்கு பன்னோக்கு மருத்துவமனை அமையும் பட்சத்தில் கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர்’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலையை மையப்படுத்திதான் அதிகளவில் பேருந்துகள் செல்கின்றன. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்ட பகுதி பேருந்து நிலையத்துக்கு உகந்ததாக இல்லை என பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசுதான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றனர்.