அரசு நிலங்கள் அபகரிப்பை தடுக்கவல்ல சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

அரசு நிலங்கள் அபகரிப்பை தடுக்கவல்ல சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌சன் நிறுவனத்துக்கு சதுர அடி 13 ஆயிரத்து 500 ரூபாய் என குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி திருத்திய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு கோரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு நிலத்தை முழுமையாக மீட்டு, வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நிலத்தை அபகரிக்க திட்டமிட்டதை ஊழல் நடவடிக்கையாக கருத்தில் கொண்டு, அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை அடையாளம் காண வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கியை வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அமைக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in