தேர்தலில் வாக்களிக்காதோரை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேர்தலில் வாக்களிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகரைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல்களின் போது, 70 சதவீத வாக்குப்பதிவை கூட தாண்டுவதில்லை. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தேர்தல்கள் நடத்தும் போது ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கும் நிலையில், ஜனநாயக கடமையை ஆற்றாத நகர்புற மக்கள், அரசின் பலன்கள், சலுகைகளை அனுபவிக்கின்றனர். தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வாக்களிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "ஏற்கெனவே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான பிளீடர் முத்துகுமார், வாக்களிப்பது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட வகையில் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. அதற்கு தங்களுக்கு அதிகாரமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in