Published : 25 Sep 2023 06:08 AM
Last Updated : 25 Sep 2023 06:08 AM

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வழக்கு - நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

சென்னை: சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் காணொலி வாயிலாக ஆஜராக 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் தினக் கூலித் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோருவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது தொடர்பாக தொழிலாளர் நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தொழிலாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தார். அதை எதிர்த்து சர்க்கரை ஆலை நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தொழிலாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் டி.கீதா ஆஜராகி, தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆலை நிர்வாகத்திடம் உள்ளது. தொழிலாளர்கள் 50 சதவீத ஊதியம் பெற உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பாலரமேஷ், மனுதாரர்களின் சம்பளக் கணக்கீடு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஆலை நிர்வாகம் மீது குற்றம் சாட்ட முடியாது என்றார்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நஸ்ருதீன், தொழிலாளர் நல நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற வழக்குகளில் இந்த நீதிமன்றத்திற்கு உதவ அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆஜராகியிருந்தார். அதுபோல, இந்த வழக்கிலும் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளான தொழிலாளர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், நிதித்துறை முதன்மைச் செயலாளர் டி.உதயசந்திரன், சர்க்கரை ஆலைகளின் ஆணையர் டி.அன்பழகன், விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் விவசாயிகள் நலத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி ஆகியோர் காணொலி வாயிலாக இன்று (செப். 25) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x