

சேலம்: எங்களின் ஒரே ஒரு லட்சியம் திமுகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதாகும். இந்தக் கோட்பாட்டில் அதிமுகவுடன் பாஜக ஒன்றாக பயணிக்கிறது. தமிழக அரசியலில் இருந்து திமுக-வை விரட்டுவதில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் சேலம் அம்மாப்பேட்டையில் நேற்று நடந்தது. பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றாக பயணிக்கிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. மக்களவைத் தேர்தல் அறிவிக்கும்போது எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதை அதிமுக தலைமையும், பாஜக தலைமையும் பேசி முடிவு எடுக்கும். எங்களுடைய ஒரே லட்சியம் திமுகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதாகும். இந்தக் கோட்பாட்டில் அதிமுகவுடன் பாஜக ஒன்றாக பயணிக்கிறது. இதில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக காவிரி நீர் குறித்து வாய் திறக்காமல் உள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு தான் தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் அடிமையாக உள்ளதால் முதல்வர் ஸ்டாலின் மவுனமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ முகாமில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகி கோபிநாத், நிர்வாகிகள் சசிகுமார், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.