

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 2019,20, 21, 22, 23 ஆகிய ஆண்டுகளில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பை முடித்த 335 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
அக்.20-ல் தேர்வானோர் பட்டியல்: இதுதவிர பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்பு முடித்த 82 பேருக்கு நாகர்கோவில், விரைவு, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர் www.boat-srp.com என்றஇணையதளத்தில் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வானோரின் பட்டியல் அக்.20-ம் தேதிமேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். அக்.30, 31, நவ.1 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.