

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை தெருக்களில் ரூ.7.6 கோடி மதிப்பீட்டில் 11.2 கிமீ நீளத்துக்கு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகளில் பழுதடைந்த சாலைகள், குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பழைய சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாதவரம் லட்சுமி அம்மன் கோயில் தெரு, திரு.வி.க.நகர் கிழக்கு மாதா தெரு, தெற்கு மாதா தெரு, கடப்பா சாலை, ஆலந்தூர் கிழக்கு கரிகாலன் தெரு ஆகிய பேருந்துசாலைகளில் ரூ.1.51 கோடி மதிப்பில் 2.20 கிமீ நீளத்துக்கு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் மணலி, மாதவரம், ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், எஸ்.பி.எஸ். காலனி, ஆலந்தூர், நங்கநல்லூர், அடையாறு, காமராஜ் நகர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில தெருக்களில் 9 கிமீ நீளத்துக்கு உட்புறச் சாலைகளில் தார்சாலைகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.