

கல்பாக்கம்/காஞ்சி/திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்காக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் கோயில்களில் கடந்த 18-ம் தேதி 2,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த சிலைகள், வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக மாமல்லபுரம் கடல், காக்களூர் ஏரி, சர்வதீர்த்த குளம் உள்ளிட்ட அந்தந்த மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 365 சிலைகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 சிலைகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் 1,400 சிலைகளும் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலான சிலைகள் ஏற்கெனவே கரைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சுமார் ஆயிரம் சிலைகள் பலத்த போலீஸ் பாதுபாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதன்படி செங்கை மாவட்ட காவல் துறை சார்பில் கடற்கரை பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், வடப்பட்டினம், கடலூர் பெரிய குப்பம் மற்றும் கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க போலீஸார் அனுமதி வழங்கினர்.
இதன்பேரில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட ஏராளமான விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக கடலில் கரைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலைகளும் சுமார் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை இருந்தன. சிலை கரைப்பு நிகழ்வின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்காக செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரணீத் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ஜகதீஸ்வரன் தலைமையில் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்காவல் படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக சிலைகளை கொண்டு வந்து கடலில் கரைத்தனர். கோவளம் கடற்கரையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கோவளம் கடலில் கரைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம் ஆகிய 2 நீர்நிலைகளில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே சிலை நிறுவப்பட்டு 3-ம் நாளில் பெரும்பாலான சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகளும் நேற்று அறிவுறுத்தப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல வேண்டும் என போலீஸார் அறிவித்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட காவல்துறை மற்றும் ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளான திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1400 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இச்சிலைகள் மேளதாளத்தோடு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட பழவேற்காடு, காக்களூர் ஏரி, ஊத்துக்கோட்டை குளம், சித்தேரி, திருத்தணி- காந்திகுளம் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஆவடி காவல் ஆணையக எல்லை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஏற்கெனவே கரைக்கப்பட்ட நிலையில் நேற்று சுமார் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பழவேற்காடு கடற்கரை மற்றும் சென்னை- எண்ணூர், பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.